விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அபாயம்?

இலங்கைக்கான விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்றமை காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சில விமானங்கள் இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருளை நிரப்புகின்றன.

எனினும் இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த விமானங்கள் இலங்கைக்கு வரும் போது எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக தம்முடன் எரிபொருளை எடுத்து வர வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனினும் அது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக விமானங்கள் தங்களுக்கு தேவையான எரிபொருளைச் சுமந்து கொண்டு பறந்தால், சரக்குகளின் எடையையும், பயணிகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த விடயம் விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை செலுத்தும் என விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியிருந்தது.

அத்துடன், எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் விமான நிலையங்கள் மூடப்படுதல் மற்றும் சர்வதேச விமானங்கள் இரத்துச் செய்யப்படுதல் அல்லது குறைக்கப்படுதல் தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களோ அல்லது தகவல்களோ வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts