நடுவானில் விமானி தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், திடீரென 5 ஆயிரம் அடி அளவுக்கு கீழ்நோக்கி பறந்தது.
இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 280 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், பொறுப்பற்று நடந்துகொண்டனர் எனத் தெரிவித்து விமானியும், துணை விமானியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையிலிருந்து பிரஸல்ஸ் (Brussels)நாட்டுக்கு ஜெட் ஏர்வேஸ் போயிங் ரக விமானம் கடந்த வாரம் கிளம்பிச் சென்றது.
துருக்கி நாட்டு வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் விமானி தூங்கி விட்டார். துணை விமானி தனது “ஐ-பாட்’ சாதனத்தில் விமானம் குறித்த விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், அந்த விமானத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 34,000 அடி உயரப் பாதையில் இருந்து திடீரென விலகி சுமார் 5,000 அடிக்கு கீழே இறங்கியது. இதைக் கவனித்துவிட்ட துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு எச்சரிக்கைத் தகவல் அனுப்பினர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட துணை விமானி, தூங்கிக் கொண்டிருந்த விமானியை எழுப்பினார். பின்னர் அந்த விமானம் தனது பாதைக்குத் திரும்பியது. இந்தச் சம்பவத்தின்போது விமானத்தின் பாதையில் வேறு விமானங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதனால், விமானத்தில் இருந்த 280 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்த தகவலை பின்பு அறிந்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம், இருவரையும் பணியிடை நீக்கம் செய்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.