Ad Widget

விமானம் விழுந்த இடத்தில் ஆதாரங்களை அழிக்க முயற்சி

கிழக்கு யுக்ரெய்னில் கடந்த வியாழன்று மலேஷிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக யுக்ரெய்ன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ukraine_malaysia_plane

தனியாட்ஸ்க் நகரிலுள்ள பிரேத அறை ஒன்றுக்கு ‘பயங்கரவாதிகள் 38 சடலங்களை கொண்டு சென்றுள்ளனர்’ என்று யுக்ரெய்னிய அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஒத்துழைப்புடனேயே கிளர்ச்சியாளர்கள் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் அழிக்கப்படுவது பற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் கிழக்கு யுக்ரெய்னில் உள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்தோ ரஷ்யாவிடமிருந்தோ பதில் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

ஆம்ஸ்டர்டம் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி, கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச்சென்ற மலேஷிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, விமானத்தின் சிதிலங்கள் விழுந்துகிடக்கின்ற பகுதிக்கு நேரடியாக சென்றுபார்ப்பதற்கு கிழக்கு யுக்ரெய்னில் உள்ள ஆயுதக்குழுக்கள் தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, அருகிலுள்ள வீதியொன்றிலிருந்து கொண்டு தாங்கள் தமது ஆய்வுகளை நடத்திவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts