Ad Widget

விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச விசாரணையாளர்கள்

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் சென்றடைந்துள்ளனர்.வியாழன் மதியம் பறந்துகொண்டிருந்தபோது சுடப்பட்டு இந்த விமானம் கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

ஓ எஸ் சி இ ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த முப்பது நிபுணர்கள் சம்பவ இடத்தை ஹெலிகாப்டரில் சென்றடைந்துள்ளனர்.

ukraine_flight_paths

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து அழிந்துள்ள இச்சம்பவம் தொடர்பில் ஒரு முழுமையான, ஆழமான, சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணைக்கு ஐநா பாதுகாப்பு சபை கோரியுள்ளது.

யுக்ரெய்னில் சண்டையில் ஈடுபட்டுள்ள அரசு தரப்பும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சித் தரப்பும் ஏவுகணையால் இந்த விமானத்தை மற்றவரே சுட்டு வீழ்த்தியதாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விமான சேதங்களை சர்வதேச விசாரணையாளர்கள் வந்து பார்வையிடுவதை அனுமதிப்போம் என ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

விமானம் விழுந்ததை கண்டு அதிர்ந்த அப்பிரதேசத்து மக்கள் சிதிலத்தின் மீது மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்
விமானம் விழுந்ததை கண்டு அதிர்ந்த அப்பிரதேசத்து மக்கள் சிதிலத்தின் மீது மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்

மலேஷியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட செயல் ஒரு சர்வதேசக் குற்றம் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தி ஹேக் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் யுக்ரெய்னிய பிரதமர் கூறியிருந்தார்.

கிழக்கு யுக்ரெய்னிய கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு தருவதில் ரஷ்யா அளவுக்கதிகமாகச் சென்றுவிட்டது என்று பிரதமர் அர்செனியு யத்சென்யுக் கூறினார்.

ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூரை நோக்கிப் பறந்த இந்த விமானம் கிழக்கு யுக்ரெய்னில் ரஷ்யாவுடனான எல்லைக்கு அருகில், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்கள் வசமுள்ள ஒரு பகுதியில், கீழே விழுந்து அழிந்துபோனது. இதில் அந்த விமானத்திலிருந்து கிட்டத்தட்ட முந்நூறு பேரும் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் பதிவுக் கருவிகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுவிட்டன.

Related Posts