விமானங்களை வீழ்த்தும் 5 ஆயிரத்து 700 வெடிகுண்டுகள் மயிலிட்டியில் மீட்பு

காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பிரதேச காணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அண்மையில் விடுவிக்கப்பட்டன.

பலாலி விமானப்படை முகாமிற்கு அருகில் உள்ள மயிலிட்டி பிரதேசத்திற்கு, யுத்த காலத்தில் பலாலியில் இருந்து செல்லும் விமானங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் விடுதலைப் புலிகளால் இவை எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றது.

குறித்த கிணற்றுக்குள் மேலும் வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பிலான மேலதிகள் சோதனைகள் இடம்பெற உள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட வெடி​பொருட்களை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் கூறினர்.

Related Posts