விபத்து: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்

முல்லைத்தீவு, முறிகண்டி செல்வபுரம் பகுதியில் சனிக்கிழமை (07) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், சாரதி உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பனிக்கன்குளம் முதல் முறிகண்டி வரை கடந்த காலங்களில் பாரிய விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களால் பாரிய உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts