கிளிநொச்சி- செல்லையாதீவு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 32 வயதான ஒருவர், செல்லையாதீவு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், யாழிலிருந்து பயணித்த லொறியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறி லொறி சாரதியை கைதுசெய்தனர். இதன்பின்னர், உயிரிழந்தவர் மாட்டுடன் மோதி உயிரிழந்ததாக கூறி லொறி சாரதியை பொலிஸார் விடுவித்துள்ளனர்.
இதனால், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்கவும் உறவினர்கள் மறுத்துள்ளனர். இதன்பின்னர் லொறி சாரதியினாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக சாட்சியம் பதியப்பட்டதன் பின்னர் இவர்களுக்கிடையிலான மோதல் நிலை தணிந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவரும், வாகனமும் கிளிநொச்சி நீதிமன்றில் முன்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.