சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ‘புலி’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.கே.டி.பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியானது.
இப்படம் வெளியான அன்று விஜய்யின் ரசிகர்களான சவுந்திர ராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் ‘புலி’ படத்தின் வாழ்த்து போஸ்டர் ஒட்ட சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகினர்.
இந்த செய்தி விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதும் மிகவும் கவலையுற்றார். பின்னர் இன்று காலை சென்னை தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலத்தில் வசித்து வரும் சவுந்திர ராஜன் மற்றும் உதயகுமார் ஆகியோரின் பெற்றோர்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, உதவியும் வழங்கினார்.
மேலும், அவர்களது குடும்பத்தினரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படியும், நான் உங்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த செயல், அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.