புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு வந்த போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஒன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 209 ஆம் பிரிவின் கீழான குற்றம் ஒன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
வழக்கின் இரண்டாவது எதிரியான முன்னார் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் வெளிநாடு தப்பிச் சென்றமையினால் அவரின்றியே அவருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்றன.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார். முன்னிலையானார்.
எதிரிகளான லலித் ஏ ஜெயசிங்க மற்றும் ஸ்ரீகஜன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநர் நிரூபிந்துள்ளதால் இருவரையும் குற்றவாளிகளாக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் தண்டனைத் தீர்ப்பளித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் கட்டளையிட்டார்.