யாழ். ஊர்காவற்துறை மாணவி வித்யா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.
இதன்படி, லலித் ஜயசிங்கவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கான தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாக ஆரியதாச குரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கொலை வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுவிஸ் குமார் என்பவரை கொழும்புக்கு தப்பிச் செல்வதற்கு உதவி வழங்கியமைக்காக லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தக் கோரி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விடுத்திருந்த வேண்டுகோளை ஆராய்ந்ததன் அடிப்படையில், குறித்த அனுமதியை நேற்று வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.