வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து சாட்சியம் பதிவு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார், யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் நேற்று (18) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் Trial at Bar விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆரம்பமானது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

வித்தியாவின் உறவினரான 38 ஆம் இலக்க சாட்சியாளரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனியார் பஸ் நடத்துநரான இவர் வித்தியாவின் தாயாரின் வேண்டுகோளுக்கு அமைய, சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பொலிஸாருடன் அங்கு சென்றதாக சாட்சியமளித்தார்.

வித்தியாவின் படுகொலையின் பின்னர் புங்குடுதீவு பகுதியில் வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

சாட்சிப் பதிவு மற்றும் குறுக்கு விசாரணைகளின் பின்னர் 38 ஆம் இலக்க சந்தேகநபர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து வழக்கின் 21 ஆம் இலக்க சாட்சியாளரான ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரான பொல்கொட பொலிஸ் நிலையத்தின் தற்போதைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

வித்தியாவின் சடலம் காணப்பட்ட விதம், இரண்டு சந்தர்ப்பங்களில் 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்ட விதம் தொடர்பில் அவர் விரிவாக சாட்சியமளித்திருந்தார்.

சடலம் மீட்கப்பட்ட தினத்தில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இதனிடையே, குறுக்கிட்ட சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, சாட்சி அவருடைய கையெழுத்தினால் பதியப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து சாட்சியமளிக்க ஆட்சேபனை தெரிவித்தார்.

இந்த ஆட்சேபனையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பிற்பகல் வேளையில் சசிதரன், சந்திரதாசன், துஷாந்தன், குகநாதன், கோகிலன் ஆகிய ஐவரும் கோவிலுக்கு சென்றுவரும் வழியில் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக சாட்சியாளரான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.

சந்தேகநபர்களில் சிலர் வேஷ்டியும் மேல் அங்கி இல்லாமலும் இருந்ததாகத் தெரிவித்த அவர், சிலர் அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாகவும் சாட்சியமளித்தார்.

இந்த சந்தேகநபர்களை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குயின்டஸ் பெரேரா கைது செய்ததாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து சந்தேகநபர்களில் ஒருவரது உறவினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோத்தராகக் கடமையாற்றுவதால், அவர்கள் குறிகட்டுவான் காவலரணுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சந்தேகநபர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கோபி என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் வாக்கு மூலங்களைப் பதிவு செய்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கையில், வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை சந்திக்குமாறு கூறப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்தவேளை, யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா, யாழ். பொலிஸ் நிலைய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கஜன், வீரசேகர என்ற பொலிஸ் அதிகாரியும் சிவில் உடையில் ஒருவரும் அங்கு இருந்ததாக சாட்சியாளர் கூறியுள்ளார்.

சிவில் உடையில் இருந்தவர் தமிழ் மாறன் என்பதை பின்னர் அறிந்துகொண்டதாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகபர்களில் ஒருவரது உறவினரான மகாலிங்கம் சசிகுமார் என்பவர் இந்த குற்றச்செயலுடன் தொடர்புபட்டுள்ளதாக லலித் ஜயசிங்க கூறியதாகவும் சாட்சியாளர் மன்றில் அறிவித்தார்.

இவர் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், உடனடியாக அவரது பெயர் மற்றும் கடவுச்சீட்டு இலக்கத்தை சர்வதேச விமான நிலையத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியதால், சந்தேகநபரின் வாக்குமூலம் ஏற்கனவே பெறப்பட்டிருக்கும் என கருதி கையடக்க தொலைபேசியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

18 ஆம் திகதி வரை 8 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கூறும் வரை மகாலிங்கம் சசிகுமார் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை எனவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

மகாலிங்கம் சசிகுமார் எனும் சந்தேகநபர் மே மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அன்று மாலை விடுவிக்கப்பட்டதை அறிந்துகொண்டதாகவும் சாட்சியாளர் கூறினார்.

இந்த சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும் சாட்சியாளர் கூறினார்.

சசிகுமார் என்ற குறித்த சந்தேகநபர் வெள்ளவத்தை பொலிஸாரினால் எவரது பணிப்பின்பேரில் கைது செய்யப்பட்டார் என்பது தனக்கு தெரியாது எனவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியான சிந்தக்க பண்டாரவினால் சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமோ அல்லது ஊர்காவற்துறை பொலிஸாரோ மகாலிங்கம் சசிகுமார் எனும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை எனவும் சாட்சியாளர் கூறினார்.

இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும் சாட்சியாளர் நேற்று நீதிமன்றத்தில் அடையாளம் காண்பித்தார்

Related Posts