வித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளை தளர்த்தி, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி பிரதிவாதிகள் ஏழு பேரும் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் மூவரடங்கிய நீதாய தீர்ப்பாயத்தினால் ஏழு குற்றவாளிகளுக்கும் கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts