வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், இவ் வழக்கு இன்னும் தொடரும் நிலையிலேயே உள்ளது. தீர்ப்புகள் வழங்கப்படக்கூடிய நிலை கால தாமதமாகி வருவதானது, எமது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், 2015 செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவின் வழக்கு தொடர்பில் கடந்த 15ஆம் திகதி நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சம்பவத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்று, அம் மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த தாங்கள், இந்த மாணவியின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் அமைப்பதாக வாக்குறுதி வழங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனவே, இந்த வழக்கின் விசாரணைகளை துரிதமாக முடித்து, உரிய தீர்வை வழங்கும் முகமாக நடவடிக்கைகளை உடனடியாகத் தாங்கள் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts