வித்தியா படுகொலை போன்றதொரு சம்பவத்தை இனியும் அனுமதியோம்: ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான சம்பவங்களை இனியும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.

நாட்டை மிரட்டும் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவையாக இவ்வாறான செயல்கள் அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்வாறான பல குற்றச்செயல்கள் கடந்த காலங்களில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘போதைப்பொருளற்ற நாடு’ என்ற தேசிய செயற்றிட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”போதைப் பொருட்களற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்றிட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலதிக செயற்பாடுகள் பல எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.

போதைப்பொருட்கள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்காது, நாட்டையும் சமூகத்தையும் போதைப்பொருளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பொறுப்புவாய்ந்த அரசு என்ற வகையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Posts