புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள், உயர் நீதிமன்றில் நேற்று (13) கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர் நீதிமன்றப் பிரதிப் பதிவாளர் சட்டத்தரணி கிரிஷானி டி கோத்தகொடயிடம் கையளித்தனர்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேம சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) விசாரணைகளை மேற்கொண்டது.
விசாரணைகளின் நிறைவில் கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி 9 எதிரிகளில் 7 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், கூட்டு வன்புணர்வு மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றங்களுக்கு 7 குற்றவாளிகளுக்கும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து, தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. 2 பேர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 7 பேரை குற்றவாளிகளாக தீர்ப்பாயத்தின் 3 நீதிபதிகளுமே ஏகமனதாகத் தீர்மானத்திருந்தனர்.
இந்த நிலையில், 5க்கும் குறையாத நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையிலேயே தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்ற சட்ட ஏற்பாட்டுக்கு அமைவாக உயர்நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்டது.
குற்றவாளிகளான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் மற்றும் அவரது சகோதரர் மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தனவும் மேன்முறையீட்டு அறிவித்தலை ஒக்டோபர் நடுப்பகுதியில் முன்வைத்தனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தின் வழக்கேடு 3 ஆயிரத்து 540 பக்கங்களைக் கொண்டது. அத்துடன், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றின் வழக்கேடு ஆயிரத்து 53 பக்கங்களைக் கொண்டது.
இரண்டு வழக்கு ஏடுகளையும் இணைத்து 4 ஆயிரத்து 540 பக்கங்களை உடைய 15 பிரதி வழக்கேடுகள், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் தயாரிக்கப்பட்டன.
அவற்றில் 14 பிரதி வழக்கேடுகளும் மூல வழக்கு ஏடுகளுமே உயர் நீதிமன்றில் நேற்று (13) கையளிக்கப்பட்டன. மேலும் ஒரு பிரதி வழக்கேடு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பேணப்படுகிறது.