புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார்.
யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகிய அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை சபாநாயகரிடம் கோரியுள்ளதாக மன்றில் அறிவித்துள்ளார்.
அத்தோடு, இவ் வழக்கு தொடர்பாக மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் மன்றில் அறிவித்துள்ளார்.
மாணவி வித்தியாவின் கொலையின் பின்னர் பிரதேச மக்களால் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சுவிஸ்குமாரை, இராஜாங்க அமைச்சர் விஜயகலா விடுவிக்குமாறு கோரியமை போன்ற காணொளியொன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அது குறித்து ஆராய்ந்து, அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இதேவேளை, சுவிஸ்குமார் தப்பிச் சென்றமைக்கு உடந்தையாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்தோடு, உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜனும் இதற்கு உடந்தையாக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார் என ஊர்காவற்றுறை நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.