புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வாக்குமூலத்தினை அடுத்த வழக்குத் தவணைக்குள் நீதமன்றிற்கு வழங்குமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக் கொண்ட வாக்குமூலங்களை அரச தரப்பு சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதேவேளை இக்கொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை கொழும்புக்குத் தப்பிச் செல்ல உதவியதாகத் தெரிவிக்கப்படும் முன்னாள் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்ந்தும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.