வித்தியா கொலை வழக்கு : பொலிஸாருக்கு பணப்பரிசு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் நேற்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே அமைச்சரால் குறித்த பண பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றபுலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் சுதத் நாஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஏ.திசரா, பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 33 பொலிஸ் அதிகாரிகளுக்கும் 13 இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் புங்குடுதீவை சேர்ந்த 09 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட்டு கடந்த மாதம் 27ஆம் திகதி 07 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், மாணவியின் குடும்பத்துக்கு குற்றவாளிகள் தலா 01 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் 40 ஆயிரம் – 75 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts