வித்தியா கொலை வழக்கு: தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகர்- விசாரணைகள் ஆரம்பம்

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தடயப் பொருளாக மோட்டார் சைக்கிள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புங்குடுதீவை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார். மறுநாள் பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குறித்த படுகொலை தொடர்பாக முன்னெடுக்கபட்ட விசாரணைகளில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

கடந்த 2017ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதலாம் மற்றும் ஏழாம் சந்தேகநபர்கள் நிரபராதிகள் என தீர்ப்பாயம் கண்டு அவர்களை வழக்கில் இருந்து விடுவித்ததுடன், ஏனைய ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், 30 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதனை அடுத்து இரு மாதங்களில் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்தனர்.

இந்நிலையில் மாணவி கொலை வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்த விசேட விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்கள முன்னாள் பொலிஸ் பரிசோதகர், கைது செய்யப்பட்ட நபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் ஒப்படைக்காது, அவர் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி குற்றப்புலனாய்வு திணைக்கள விசேட அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related Posts