வித்தியா கொலை வழக்கு: ஜின்ரெக் நிறுவனப் பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகப் பணிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் டி.என்.ஏ அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காமை குறித்து மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு ‘ஜின்ரெக்’ நிறுவன அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவில் மாணவி வித்தயா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நெருங்குகிறபோதும் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதிவான் டி.என்.ஏ. அறிக்கை தாமதாவது குறித்து பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது ஜின்ரெக் நிறுவனம் அறிக்கையை தரத் தாமதிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து நீதிவான் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் வரும் மே 4 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகி நீதிமன்றுக்கு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Posts