யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்றும், வழக்குத் தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றதெனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர்.
மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த இரு தினங்களாக வழக்குத் தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரைகள் இடம்பெற்றன. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற எதிரிகள் தரப்பு சாட்சிகளின் தொகுப்புரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. எதிரிகள் தரப்பு சாட்சியங்களது தொகுப்புரையின் முழு வடிவம் வருமாறு-
வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி நம்பகத்தன்மையற்றது.
வழக்கின் 1ம், 2ம், 3ம், 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜயவர்த்தன தனது தொகுப்புரையின் போது, ”இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இப்ரான் என்பவரின் சாட்சியத்தை வழக்கு தொடுனர் தரப்பு முன்னிறுத்தி உள்ளது. குறித்த சாட்சி ஏற்கனவே மோசடி குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வருபவராவார். அவரது சாட்சியத்தை முன்னிலைப்படுத்த முடியாது. அந்த சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது.
சுவிஸ் குமார், குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் என்றால், ஏன் பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி அது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை” என வினா எழுப்பினார்.
முரண்பாடான சாட்சியங்கள்.
”குற்றச் செயலை கண்ணால் கண்ட சாட்சியம் என முற்படுத்தப்பட்ட இரு சாட்சிகளும், முரண்பாடான சாட்சியங்களை அளித்துள்ளன.
சுரேஷ்கரன் என்பவர் சாட்சியம் அளிக்கையில் வன்புணர்வை வீடியோ புகைப்படம் எடுத்தமை தொடர்பில் தெரியாதென சாட்சியமளித்துள்ளார். அதே இடத்தில் நின்ற மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக சாட்சியமளித்துள்ளார். இந்த இரு சாட்சிகளும் முரணான சாட்சியங்களை வழங்கியுள்ளன.
எனவே இந்த குற்றச் சம்பவம் தொடர்பில் எனது தரப்பினருக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை” என தெரிவித்தார்.
மதுபோதைக்கு அடிமையானவரின் சாட்சி நம்பகத்தன்மையா?
அதனை தொடர்ந்து சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி தனது தொகுப்புரையின் போது, ”இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியாக முற்படுத்தபப்ட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர், தினமும் ஒரு போத்தல் சாராயமும் 4 போத்தல் கள்ளும் குடிப்பேன் என சாட்சியம் வழங்கும் போது தெரிவித்திருந்தார்.
தினமும் மதுபோதையில் இருக்கும், குடிக்கு அடிமையான ஒருவருக்கு மதுவை கொடுத்து தமக்கு வேண்டிய காரியங்களை எவரேனும் செய்து கொள்ள முடியும். எனவே அவரின் சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது” என தெரிவித்தார்.
அதன்போது மன்று, ”மதுபோதைக்கு அடிமையான ஒருவர் சாட்சி சொல்லக் கூடாதென சட்டம் கூறியுள்ளதா?” என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த சட்டத்தரணி, ”அவ்வாறு இல்லை. ஆனால், இந்த சாட்சியம் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது” என கூறினார்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுபவரின் சாட்சி நம்பகத்தன்மையா?
”அடுத்ததாக கண்கண்ட சாட்சியமாக முற்படுத்தப்பட்ட மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன், சட்டவிரோதமாக வீட்டில் கள்ளு விற்பனை செய்பவர். அதற்காக பல தடவைகள் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தண்டம் செலுத்தியுள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகள் தன்னுடைய வீட்டில் இருந்து கள்ளு அருந்தும் போது வித்தியாவை கடத்த திட்டம் தீட்டியதாகவும், தன்னுடைய வீட்டில் வைத்தே பொறுப்புக்கள் பகிரப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார். அத்துடன் மாணவி கடத்தப்பட்டு, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்படும் வரையில், உடன் இருந்ததாகவும் சாட்சியமளித்துள்ளார். அவ்வாறெனில், அவர் சாட்சியமாக இந்த மன்றில் முற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவர் இல்லை. எதிரியாக மன்றில் நிற்க வேண்டியவர். ஏன் அவரை எதிரியாக சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை” என்றார்.
மோசடிக்காரனின் சாட்சி நம்பகத்தன்மையா?
”அடுத்த முக்கிய சாட்சியாக முற்படுத்தப்பட்ட இப்ரான், இவர் மோசடி வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர். அவ்வாறான மோசடி குற்றச்சாட்டில் உள்ள ஒருவரின் சாட்சியம் நம்பகத்தன்மை உடையதா? என்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணி வினா எழுப்பினார்.
இக் குற்றத்திற்கு இரு நோக்கங்களா?
”ஒரு குற்றத்திற்கு ஒரு நோக்கம் இருக்கலாம். ஆனால் இந்த குற்றத்திற்கு இரு நோக்கங்கள் உள்ளதாக வழக்கு தொடுனர் தரப்பு குற்றம் சாட்டுகின்றது. 6ஆம் எதிரி மாணவியை ஒருதலையாக காதலித்ததாகவும், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தியதால் பழிவாங்க செய்யப்பட்டதாகவும், மற்றையது சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஒருவர் அங்குள்ள மாபியா கும்பல் கேட்டதற்கு இணங்க ஆசிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யும் நேரடி வீடியோ காட்சியாக பதிவுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதில் முதலாவது நோக்கமாக கூறப்படும் ஒருதலை காதல் பிரச்சினை தொடர்பில் மாணவியின் தாய் சாட்சியம் அளிக்கவில்லை. அவரிடம் பிரதான விசாரணையின் போது, மாணவி பாடசாலை சென்று வரும் போது பிரச்சினை ஏதேனும் இருந்ததா, மாணவிக்கு காதல் தொடர்பு இருந்ததா என கேட்ட போது, இல்லை என பதில் அளித்துள்ளார். குறுக்கு விசாரணையின் போது பாடசாலை சென்று வரும் போது யாரேனும் தொந்தரவு செய்வதாக வீட்டில் கூறியுள்ளாரா என கேட்டபோது அதற்கும் இல்லை என பதில் அளித்துள்ளார்.
மாணவியை 6ஆம் எதிரி ஒருதலையாக காதலித்து தொந்தரவு செய்திருந்தால், மாணவியின் வீட்டாருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்” என்றார்.
முரணான சாட்சியம்.
”சம்பவ இடத்தில் நின்றதாக கண்கண்ட சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் ஆகியோர் முரணான சாட்சியங்களை அளித்துள்ளனர்.
சுரேஷ்கரன், வீடியோ எடுத்தமை தொடர்பில் தெரியாதென சாட்சியம் அளிக்கின்றார். மாப்பிள்ளையோ, வீடியோ எடுத்தார்கள் என சாட்சியம் அளித்தார். அதேபோன்று சுரேஷ்கரன் மாணவியை இழுத்து சென்றதாக சாட்சியம் அளித்தார். மாப்பிள்ளையோ, மாணவியை நால்வர் கைகள் மற்றும் கால்களை பிடித்து தூக்கிச் சென்றதாக சாட்சியம் அளித்துள்ளார். இவ்வாறு பல விடயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன” என்றார்.
உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர்.
”சட்ட வைத்திய அதிகாரி தனது சாட்சியத்தின் போது மாணவியின் நகங்களினுள் தசை துண்டுகள் இருந்ததாகவும் அதனால் அதனை பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் கூறி இருந்தார்.
நகங்களினுள் தசைகள் இருந்திருப்பின், மாணவி எதிரிகளுடன் போராடியதால் அவர்களுக்கு நகக் கீறல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறென்றால், மாணவியின் கைகள் சுதந்திரமாக எதிரியுடன் போராட கூடிய நிலையில் இருந்துள்ளன. அவ்வாறெனில், மாணவியின் கைகளை அழுத்தி பிடிக்கவில்லை. ஆனால் கண்கண்ட சாட்சியம் என சாட்சி அளித்தவர்கள் கைகளை எதிரிகள் பிடித்து இருந்ததாக கூறினார்கள்.
அதேபோன்று மாணவியின் தலையில் ஏற்பட்ட காயம் விழுந்ததால் ஏற்பட்ட காயம் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஏனெனில் விழுந்திருந்தால் மண்டையோடு வெடித்திருக்கும் என்றும், தலையில் ஏற்பட்ட காயம் மட்டமான ஆயுதத்தால் தாக்கியதால் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார். அப்படியாயின், மாணவியை தலையில் தாக்கிய பின்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்கள்“ என்றார்.
போதுமான ஆதாரங்கள் இல்லை.
”இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய போதுமான சான்றுப்பொருட்கள் ஜின்டேக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் பரிசோதனையில் எந்த அறிக்கையும் எதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை.
எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிரிகள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. உண்மையான குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்” என தெரிவித்தார்.
பொய் சாட்சியம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 4ம், 7ம் மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் தொகுப்புரை வழங்கினார். அவர் தமது தொகுப்புரையில், ”கண்கண்ட சாட்சி என சாட்சியமளித்த சுரேஷ்கரன், மாணவியின் கையை யார் பிடித்தது, காலை யார் பிடித்தது என தெளிவாக சாட்சியம் அளித்துள்ளார். வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பிலும் தெரியாதென சாட்சியம் அளித்துள்ளார்.
வீடியோ எடுத்ததை பார்த்ததாக கூறிய மாப்பிள்ளையின் சாட்சியம் நம்பகத்தன்மையற்றதென 5 ஆம் எதிரியின் சட்டத்தரணி கூறியுள்ளார். அதனையே நானும் கூறுகிறேன்.
ஆலடி சந்தியில் 12ஆம் திகதி (மாணவி கடத்தப்படுவதற்கு முதல் நாள்) சுவிஸ் குமார் உள்ளிட்டவர்களை வாகனத்தில் கண்டதாக சாட்சியம் அளித்த இலங்கேஸ்வரன், தான் கடையில் நின்று பார்த்த போது சுவிஸ்குமார் கருப்பு கண்ணாடி அணிந்து வித்தியாவை நோக்கியதை பார்த்தேன் என சாட்சியம் அளித்தார்” என்றார்.
நீதிபதி இளஞ்செழியன் கருப்பு கண்ணாடி அணிந்து விளக்கம்!
தொடர்ந்து ”பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் கறுப்பு கண்ணாடி அணிந்து பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். ஏனெனில் அவர்கள் யாரை எங்கே பார்க்கின்றார்கள் என்பதனை எதிரில் உள்ளவர்கள் அவதானிக்க முடியாது. அவ்வாறு இருக்கையில் சுவிஸ் குமார் கறுப்பு கண்ணாடி போட்டு வித்தியாவைதான் பார்த்தார் என எவ்வாறு அவரால் சாட்சியம் அளிக்க முடிந்தது?” எனவும் வினா எழுப்பினார்.
இதன்போது சட்டத்தரணி மன்றுக்கு கருப்பு கண்ணாடி ஒன்றை கொண்டுவந்து, அதனை தான் அணிந்து காட்டி தன்னுடைய கருமணி எங்கே பார்க்கின்றது என அவதானிக்க முடியாது என மன்றில் கூறினார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பார்க்கும் திசையை வைத்து யாரை பார்க்கிறீர் என கூற முடியுமென தெரிவித்தனர். நீதிபதி மா.இளஞ்செழியனும் கருப்பு கண்ணாடியை அணிந்து அதனை செய்து காட்டினார்.
மோசடி செய்தவர் மன்றில் பொய் சாட்சி அளித்தார்.
சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் தொடர்ந்து தமது தொகுப்புரையின் போது, ”மற்றுமொரு முக்கியமான சாட்சியமாக முற்படுத்தப்பட்ட இப்ரான் என்பவர் மோசடிக்காரன். அவர் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிப்பவர். அவர் இந்த கௌரவ மன்றிலும் மோசடி சாட்சி அளித்துள்ளார்.
தனக்கு இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் சுவிஸ் குமார் மாத்திரமே கூறியதாகவும் வேறு எந்த எதிரிகளும் இந்த குற்றச்சம்பவம் தொடர்பில் தன்னுடன் கதைக்கவில்லை எனவும் சாட்சியம் அளித்துள்ளார்.
அதேபோன்று தான் சிறைச்சாலை அத்தியட்சகரின் அறையில் வைத்திய பரிசோதனையை முடித்து வெளியே வந்த போதே, குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகரை கண்டதாக சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில், அவ்வாறு மருத்துவர்கள் எவரையும் தான் காணவில்லை என சாட்சி அளித்தார்.
அதேபோன்று தான் கடனட்டை (கிரடிட்கார்ட்) மோசடி வழக்கில் தண்டனை பெற்றதாகவும், அதுவும் தான் செய்யாத குற்றம் எனவும், தனது நண்பன் செய்த குற்றத்திற்காகவே தான் சிறைத் தண்டனை அனுபவிப்பதாகவும் சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாலேயே தான் சிறைத் தண்டனை அனுபவிப்பதாக சாட்சியம் அளித்தார்” என்றார்.
ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா?
”சுவிஸ் நாட்டில் மாபியா கும்பலொன்று உள்ளதென்றும், அவர்கள் ஆசிய பெண்ணை கடத்தி துஷ்பிரயோகம் செய்து, படுகொலை செய்வதனை நேரடி வீடியோ எடுக்க வேண்டும் என்று சுவிஸ் குமாருடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இப்ரான் தனது சாட்சியத்தில் சொல்கின்றார்.
ஏன் ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில்தான் உள்ளாரா? சிங்கப்பூரில் எவ்வளவு அழகான பெண்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் இலங்கையில் புங்குடுதீவில் பாடசாலையில் கற்கும் மாணவிதான் வேண்டுமா? இந்தக் கதை எல்லாம் திரைப்படக் கதை போன்று உள்ளது. இந்தக் கதையை மோசடி குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றவர் சட்சியமாக கூறியுள்ளார். இதனை நம்பவே முடியாது” என்றார்.
12ஆம் திகதி சுவிஸ்குமார் கொழும்பில் இருந்தார்.
அத்துடன் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் தனது தரப்பான 4ஆம் எதிரி, 7ஆம் எதிரி மற்றும் 9ஆம் எதிரி ஆகியோர் கொழும்பிலேயே இருந்தனர் என்றும், 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனத்தில் தனது தரப்பை சேர்ந்தவர்களை கண்டதாக இலங்கேஸ்வரன் என்பவர் கூறிய சாட்சி புனையப்பட்ட பொய் சாட்சி என்றும் குறிப்பிட்டார்.
எழுத்து மூல சமர்ப்பணங்களை 15ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க உத்தரவு.
எதிரிகள் தரப்பு தொகுப்புரை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர், வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள், எழுத்து மூலம் சமர்ப்பணங்கள் இருப்பின் அதனை எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதனையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி மாணவியின் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு திறந்த மன்றில் வழங்கப்படும் என தீர்ப்பாயம் அறிவித்தது. அன்றைய தினம் மாணவியின் தாயாரையும் மன்றுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டது.
மேலும், 11ஆவது சந்தேகநபராக கைதுசெய்யப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவரையும் அன்றைய தினம் மன்றில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டது.