புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் ருவான் இளையபெரு நேற்று ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
அதன் போது, குறித்த வழக்கின் 53 ஆவது சாட்சியாளரான ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தரான ருவான் இளையபெரு சாட்சியமளித்தார்.
இதேவேளை வழக்கு தொடுனர் தரப்பு வழக்கில் திருத்தங்கள் செய்ய வேண்டுமாயின் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சாட்சி பதிவுகளுக்காக எதிர்வரும் 28ஆம், 29ஆம் ,மற்றும் 30ஆம் திகதிகளிலும், செப்ரெம்பர் மாதம் 4ஆம்,11ஆம் , 12ஆம் , 13ஆம்,14ஆம் மற்றும் 15ஆம் திகதிகள் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.
அதையடுத்து எதிர்வரும் 28ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்த மன்று அதுவரையில் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
அதேவேளை குறித்த வழக்கின் எதிரிகள் ஒன்பது பேரினதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.