வித்தியா கொலை வழக்கில் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நேற்றய வழக்கு விசாரணையின் போதும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் டி.என்.ஏ அறிக்கை உட்பட அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பில் பரிசீலிக்க முடியுமா என நீதவானிடம் கோரினார். அதற்கு பதிலளித்த நீதவான் வழக்கு ஓரிரு மாதங்களில் மேல் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்படும் என்றும் அங்கு பிணை விண்ணப்பத்தினை கோர முடியும் என்றும் கூறி வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை, ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் சந்தேக நபர்களே. அவர்கள் தொடர்பில் செய்திகள் வெளியிடும் போது அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செய்திகள் வெளியிட வேண்டும். ஊடகங்கள் சந்தேக நபர்களை குற்றவாளிகள் எனும் விதமாக செய்திகளை வெளியிட்டால் அது மக்கள் மத்தியில் இவர்களை குற்றவாளிகள் எனும் எண்ணப்பாட்டை தோற்றுவிக்கும். இவர்கள் குற்றவாளிகளாக இன்னமும் இனம் காணப்படவில்லை எனவே பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என கோரினார்கள்.

இதனிடையே, மாணவி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டவேளை மாணவிக்காக நாம் இலவசமாக வாதாடி மாணவியின் குடும்பத்திற்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என சட்டத்தரணிகள் சிலர் தாமாக முன்வந்தது அறிக்கைகள் விட்டு இருந்தனர். முதல் ஓரிரு வழக்கு தவணையின் போது சில சட்டத்தரணிகள் மாணவி சார்பில் முன்னிலையாகி இருந்தனர். தொடர்ந்து வந்த வழக்கு தவணைகளின் போது ஓரிரு சட்டத்தரணிகள் முன்னிலையாகி வந்த வேளை அவர்களும் நேற்றய வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகவில்லை.

இந்தநிலையில், புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளன. மிக விரைவில் சாட்சிகளின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Related Posts