புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த வழக்கின் விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் (ரயலட் பார்) முறைமையில் நடைபெற்றது.
இந்த வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த நான்காம் திகதியுடன் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 28ஆம் திகதி எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
கடந்த இரண்டு தினங்களும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் இடம்பெற்று நேற்றய தினத்துடன் எதிரிகள் தரப்பு சாட்சியங்களை முடிவுறுத்துவதாக , எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
அதனையடுத்து, வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பு தொகுப்புரைக்காக எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி திகதியிடப்பட்டது.
அன்றைய தினம் வாய் மொழி மூலமாக இரு தரப்புக்களும் தமது தொகுப்புரைகளை மன்றில் வழங்க வேண்டும் எனவும், மேலதிக சமர்ப்பணங்கள் செய்வதாயின் அதனை அன்றைய தினமே இரண்டு தரப்பினரும் எழுது மூலம் மன்றுக்கு வழங்க வேண்டும் எனவும் எழுத்து மூலம் வழங்கப்படும் சமர்ப்பணம் மூன்று பிரதிகளாக மன்றில் வழங்கப்பட வேண்டும் எனவும் மன்று கட்டளையிட்டது.
அதனைத்தொடர்ந்து 9 எதிரிகளையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி இரு தரப்பு தொகுப்புரைகளும் முடிவடைந்ததும் தீர்ப்புக்கு மன்று திகதியிடும். அது பெரும்பாலும் அடுத்த மாத இறுதி வாரத்திற்கு முன்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.