வித்தியா கொலை திட்டமிட்ட சதி!! வித்தியாவின் தாயார்

புங்குடுதீவு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியும் கொதிப்பும் இன்னும் மறையவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடிக் கடக்கவுள்ளது. வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் வித்தியா கொல்லப்பட்டு ஒரு வருடமாகிறது.

வடக்கு, கிழக்கையே கொதிக்க வைத்த வித்தியா விவகாரம் இப்பொழுது மெது மெதுவாக அடங்கிச் செல்கிறது. வித்தியாவிற்கான எழுச்சியில் வலியுறுத்தப்பட்ட பிரதான கோரிக்கை கொலையாளிகளை அடையாளம் காணுங்கள், அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் என்பது. ஒரு வருடம் நெருங்கும் நிலையில் நிலவரங்கள் எப்படி இருக்கிறது? இப்படி பல விடயங்களைப் பேசியிருக்கிறார் வித்தியாவின் தாயார் சி.சரஸ்வதி. வவுனியாவில் வீட்டைப் பெற்றுக் கொண்ட போது இந்த கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

கேள்வி: வித்யா கொல்லப்பட்டு ஒரு வருடமாகப் போகிறது. வழக்கு விவகாரங்கள் என்ன நிலையில் இருக்கின்றன?

பதில்: எனது மகள் வித்தியா மரணமடைந்து வருகின்ற மாதம் 13 ஆம் திகதி ஒரு வருடம் ஆகிறது. ஆனால் வழக்கு விசாரணைகள் தான் இன்னும் முடிந்த பாடில்லை. ஆரம்பத்தில் இந்த வழக்கில் பொலிசார் அக்கறையற்றவர்களாக தான் இருந்தார்கள். நான் முறையிடச் சென்ற போது கூட அதை ஏற்கின்ற பக்குவம் பொலிசாரிடம் இருக்கவில்லை. ஆனால் பின்னர் சீஐடியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. பொலிசாரின் செயற்பாட்டால் நம்பிக்கை இழந்திருந்தோம். நீதி கிடைக்காது என்றே நம்பினோம். ஆனால் சீஐடி தீவிரமாக விசாரித்து எனது மகளின் கண்ணாடியை 10 நாட்களுக்கு பின் கண்டு பிடித்தார்கள். அதன் பின் இவர்கள் நீதியைப் பெற்றுத் தருவார்கள் என நம்பி இருக்கிறோம். தற்போது ஒரு வருடம் நெருங்கின்றது. இந்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டுள்ளனர். அதனால் இது வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயற்பாடு. இந்த வழக்கை மேல் நீதிமன்றில் ஒப்படைக்கப் போகிறார்கள். அங்கு மாதம் இரு தவணை வழக்கு இடம்பெறும் என கூறப்படுகிறது. எனவே விரைவாக இனி இந்த வழக்குக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். அது தான் எனது விருப்பமும் கூட.

கேள்வி: வழக்கு விசாரணை ஒருவருடமாக நீடிக்கிறது. டி.என்.ஏ ஆதாரங்கள் போன்ற முக்கிய ஆதாரங்களை பொலிசாரால் சமர்ப்பிக்க முடியாமல் உள்ளது. ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் முடியாது. பெரும்பாலான பாலியல் வன்முறைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் போவதைப் போல இதிலும் நடக்கும் அபாயமுள்ளதைப் போல் தெரிகிறதே?

பதில்: இந்த வழக்கு தொடர்பான பல ஆதாரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாக அறிகின்றேன். இது தவிர கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கூட அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை சொல்ல முனைகிறார்கள். ஆகவே குற்றவாளிகள் இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடம் நிறைவடைகின்ற போதும் வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்திடம் செல்லவுள்ளது. அங்கே விரைவு படுத்தப்படும் என நம்புகின்றேன். நான் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என கோரினேன். அவர் விசேட நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்வதாக கூறியிருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை அவ்வாறு நடக்கவில்லை. அதன்பின் கடந்த மார்ச் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரை கொழும்பில் சந்தித்தேன். அவர்களிடமும் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்குமாறு கோரினேன். அவர்களும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தனர். அப்போது ஒரு வருடம் கடந்தாலும் இந்த வழக்கை கொண்டு நடத்த விசேட ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக செய்வதாக பிரதமர் தெரிவித்திருந்தார். ஆகவே, இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அப்போது தான் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும்.

கேள்வி: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?

பதில்: தென்னிலங்கையில் சேயா என்ற சிறுமியின் கொலையுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. ஆதலால் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொலை தொடர்பில் பல ஆதாரங்கள் பொலிசாரிடம் கிடைத்திருக்கின்றது. அப்படிஇருக்கையில் குற்றவாளிகள் எப்படி தப்ப முடியும். எமது சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் இருப்பதற்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கேள்வி: ஜனாதிபதியை சந்தித்த போது உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறியிருந்தீர்கள். எப்படியான அச்சுறுத்தல் புங்குடுதீவில் இருந்தது?

பதில்: எனது மகளின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மத்தியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக எனது மகள் இறந்த போது அடைந்த வேதனையை விட இந்த ஒரு வருடத்திற்குள் மற்றவர்களின் கதைகளாலும், ஊடகங்களின் சில செயற்பாட்டாலும் நாம் அடைந்த வேதனைகள் அதிகம். இன்றும் கூட நான் பஸ்சில் செல்கின்ற போது, அல்லது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்கின்ற போது கைது செயப்பட்டவர்களின் உறவினர்கள் என்னைக் காண்கின்ற போது தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி தாறுமாறாக பேசுகிறார்கள். கண்டபடி சொல்கிறார்கள். பொலிசாருக்கு முன்னால் கூட இந்தச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. நாம் பொறுமையாக தான் இருக்கின்றோம். எனது மகளுக்கு நீதி வேண்டும் என்பதற்காக இந்த அவமானங்களை சந்திக்கின்றேன். குற்றவாளிகளின் உறவினர்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். பிள்ளையை பறி கொடுத்த நாம் தலைகுனித்து நடக்க வேண்டியுள்ளது. ஆகவே, புங்குடுதீவில் இந்த நிலையில் தொடர்ச்சியாக வாழ முடியும் என நான் நினைக்கவில்லை. இது தவிர, புங்குடுதீவில் நடமாடும் ஒவ்வொரு நிமிடமும் எனது மகளின் ஞாபங்களே வந்து செல்கின்றன. அவள் தடம் பட்ட இடங்களை என்னால் தனிமையில் கடந்து செல்ல முடியவில்லை.

கேள்வி: இப்பொழுது வவுனியாவில் உங்களிற்கு வீடு தரப்படுவிட்டது. இனி வவுனியாவில் இருக்கப் போகிறீர்களா? புங்குடுதீவில் இருக்கப் போகிறீர்களா?

பதில்: தற்போது இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் வீடு தரப்பட்டுள்ளது. காணி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்றம் செல்வதால் மாதம் இரு முறை வழக்கு வரும். அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். இப்பொழுது கூட பொலிசார் சில வேளைகளில் விசாரணைக்காக வருகிறார்கள். ஆதலால் அங்கு இருந்தால் தான் வழக்கை விரைவு படுத்த முடியம். அதனால் வழக்கு முடிந்த பின் வவுனியாவில் வந்து குடியிருக்கலாம் என நினைகின்றேன். மகளின் ஓராண்டு கூட புங்குடுதீவிலேயே செய்ய வேண்டும். ஆதலால் அவை எல்லாம் முடிய தான் வவுனியாவில் இருக்கலாம்.

கேள்வி: வித்யா இல்லாத ஒருவருடத்தை எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: அதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவள் இல்லாததால் எனது கணவருக்கு கூட உடல் நிலை மோசமாகிவிட்டது. அவள் தான் அவரை பார்கிறவள். தந்தை மேல் நல்ல பாசமாக இருந்தவள். தற்போது அவள் இல்லாத உலகத்தை அவரால் ஏற்க முடியாது இருக்கிறது. வீட்டில் சமையல் என்றால் கூட என்னோடு கூட இருந்து செய்வாள். ஆனால் இன்று எனது செல்லம் இல்லாமல் நான் படுகின்ற துன்பத்தை யாரிடம் சொல்ல. எனது மகளுக்கு நீதி வேண்டும். எனக்கு வித்தியா வேண்டும். வித்தியா …. வித்தியா.. என கூறிய தாயிடம் இருந்து மேலும் வார்த்தைகள் வர மறுத்து தாயின் உள்ளத்தில் இருந்து அழுகை மட்டுமே விடைகளாக வந்தது

Related Posts