வித்தியா கொலை குறித்த விசேட நீதிமன்றத்தை நிறுவ முடியவில்லை! கைவிரித்தது அரசாங்கம்

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறுவ முடியாத நிலைமை காணப்படுவதாக மகளிர் – சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம் ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்னாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மாத்திரம் நெருங்கிய உறவினர்களால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கையான 916 பேர் தொடர்பில் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

அத்துடன் பொலிஸ் நிலையங்களுக்கென 124 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோன்று நெருங்கிய உறவினர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தொடர்பாக தேசிய மகளிர் குழுவுக்கு 345 முறைப்பாடுகளும் பொலிஸா ருக்கு 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையின் பின்னர் பாலியல் குற்றச் செயல்களை விசாரிப்பதற்னெ விசேட நீதிமன்றம் ஒன்று நிறுவப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். எனினும் அவ்வாறு விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான இயலுமை இல்லாதுள்ளது. என்றார்.

Related Posts