புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய 11வது மற்றும் 12வது சந்தேக நபர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 12வது சந்தேக நபரான ரவீந்திரன் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கினார். இதன்போது, வித்தியா கொலை சம்பந்தமாக தனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும், எல்லோருக்கும் தெரிந்த விடயமே தனக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பமானது. இதன்போது, 12வது சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், திறந்த மன்றிலா, அல்லது மூடிய அறையிலா வாக்குமூலம் வழங்கப் போகின்றீர்கள் என நீதிபதி 12வது சந்தேக நபரிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சந்தேக நபர் இந்த கொலைத் தொடர்பில் தனக்கு மேலதிகமாக எதுவும் தெரியாது என்றும், எல்லோருக்கும் தெரிந்த விடயமே தனக்கும் தெரியும் என்றும் கூறினார். இதன்போது, குறுக்கிட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டாவது, மற்றும் மூன்றாவது சந்தேக நபர்களுக்கு வித்தியா தொடர்பிலான தகவல்களை வழங்கியவர் இவர்தான் என்று குறிப்பிட்டனர்.
வித்தியா பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலை விட்டு வரும் தகவல்களை இவரே வழங்கியதாகவும் கூறினர். எனினும் அதனை மறுத்த 12வது சந்தேகநபர் தான் அவர்களுக்கு எதுவித தகவல்களையும் வழங்கவில்லை என்றும் அவர்கள் தன்னிடம் எதனையும் கேட்கவில்லை என்றும் கூறினார்.
இதன்பின்னர் நீதவான் எம்.எம்.றியாழ் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், விசாரணை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
பொதுமக்களால் பிடித்து கொடுக்கப்பட்ட சுவிஸ் குமார் கொழும்பிற்கு தப்பிச் சென்றமை, மற்றும் ஏனைய அறிக்கைகளை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்குமாறு நீதிபதி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.