மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குறைந்தபட்சம் 60 குற்றங்கள் தொடர்பாக விசாரணை மற்றும் முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன, நேவி சம்பத்திற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டுவதிலும் நிசாந்த சில்வா முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் பொலிஸ்மா அதிபர் இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை தொடர்பில் நிசாந்த சில்வா முக்கிய ஆதாரங்களை சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.