மரண தண்டனையை நிறைவேற்றுவதாயின் முதலில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுட்டவர்களுக்கே அதனை நிறைவேற்ற வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து பாதாள உலகக் குழுவை முதலில் குறிவைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”நாட்டில் மரணதண்டனையை நிறைவேற்ற மீண்டும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அதிலும், பாதாள உலகக் குழுவை குறிவைத்து இந்த தண்டனையை நிறைவேற்றவுள்ளனர்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதாயின் புங்குடுதீவு மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களை முதலில் தூக்கிலிட வேணடும். அத்தோடு, பாரிய சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். அவர்களை முதலில் தூக்கிலிட வேண்டும்.
இவற்றை விடுத்து போதைப்பொருளுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினரை குறிவைத்துள்ளமையானது, சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த அரசாங்கத்தின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினர் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகின்றது. அவற்றை மூடிமறைக்கவா அரசாங்கம் இச்செயற்பாட்டை மேற்கொள்கின்றதென்ற சந்தேகம் ஏற்படுகின்றது” என்றார்.