யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான சுரேஸ்கரன் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தலின் பிரகாரம் சந்தேகநபர்கள் இருவரையும் விடுவிக்குமாறு பதில் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றபோது காணாமல் போன வித்தியா, பின்னர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் சந்கேதநபர்கள் தொடர்பான உறுதியான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பாக அண்மையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இக் கொலை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறும் சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் சந்தேகநபர்களை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.