வித்தியாவுக்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு எப்போது கிடைக்கும்?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வழங்கப்பட்ட போதிலும், வவுனியாவில் கொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதென வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையை பொறுத்தவரை, சிறுவர்களுக்கான சட்டங்கள் இருக்கின்றதா என்பதில் சந்தேகங்கள் காணப்படுகின்றதென குறிப்பிட்ட சிவநேசன், சிறுவர்களுக்கு எதிரான பல துஷ்பிரயோக சம்பவங்கள் தண்டிக்கப்படாமலேயே செல்கின்றதென குறிப்பிட்டார்.

சிறுவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அநாதரவான சிறுவர்களை பராமரிப்பதற்கான சிறுவர் இல்லங்களை அமைப்பதற்கான நியதிச் சட்டங்கள் வடக்கு மாகாண சபையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அச் சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மத அடக்குமுறை குறித்தும் கருத்துத் தெரிவித்த சிவநேசன், ஒரு மதம் இன்னுமொரு மதத்தை அடக்கி ஒடுக்குவதை வன்மையாக கண்டிப்பதாக இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts