புங்குடுதீவு மாணவி வித்தியாவின் நகக் கீறல்களுடன் ஒருவர் வெளியில் உள்ளாரென்றும், சட்டவைத்திய அதிகாரிகளை மீள அழைத்து சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிரிகள் தரப்பு வழக்குத் தொடுநர் ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில், எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது.
இதன்போது, ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் மாணவி நகத்தால் கீறியுள்ளமை பகுப்பாய்வில் உள்ளதோடு, அந்த நகத்தில் தசை இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும், எதிரிகளை சோதனைக்குட்படுத்திய போது, அவர்களது உடம்பில் நகக்கீறல் இல்லை. அப்படியாயின் நகக் கீறலுடன வெளியில் ஒருவர் உள்ளார் என்றும், அதனால் சட்டவைத்திய அதிகாரியை மீள அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
இதற்கு வழக்குத் தொடுநர் தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. எனினும் இதுகுறித்து எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில், இன்றைய தினம் தொடர்ந்தும் சாட்சியப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.