புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் அவரது தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை ஊர்காவற்றுறை நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மேலும் நீடித்துள்ளது.
மாணவி வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோரது விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்கிழமை ஊர்காவற்றுறை பதில் நீதிவான் இ.சபேஷன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநான் வித்தியா கடந்த வருடம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அதனையடுத்து வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தினர்கள் என்ற குற்றச்சாட்டின்போரில் குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.