வித்தியாவின் தாயார் நேற்று ட்ரயல் அட்பார் மன்றில் வழங்கிய சாட்சியம்

எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு சைக்கிளில் தான் செல்வாள் வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்ல 1 தொடக்கம் 1 அரை மணித்தியாலம் தேவைப்படும் பெரும்பாலும் எனது மகன் (வித்தியாவின் அண்ணா) வித்தியாவை பாடசாலைக்கு அழைத்துச் செல்வான் சிலவேளைகளில் அவனுக்கு வேலை இருந்தால் கூட படிக்கும் சக பிள்ளைகளுடனேயே வித்தியா செல்வாள்.

எனது கணவர் பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பதனால் எமது குடும்பம் பொருளாதாரச்சிக்கலை எதிர்கொண்டதன் சூழ்நிலை காரணமாக மகன் இடையில் படிப்பை கைவிட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்.

வீட்டில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் வீதியின் இரு மருங்கிலும் பற்றைக் காடுகளும் பாழடைந்த வீடுகளுமே உள்ளன அவற்றைத் தாண்டியே பாடசாலைக்குச் செல்ல வேண்டும் அந்த வீதியும் குன்றும் குழியுமாக இருக்கும் மழை காலத்தில் அந்த வீதியை பயன்படுத்த முடியாது அந்த வீதியில் பெரும்பாலும் சன நடமாட்டம் குறைவாக காணப்படும் பாடசாலை நேரத்திலும் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்லும் நேரத்திலும் தான் அந்த வீதியில் சன நடமாட்டம் இருக்கும் ஏனைய நேரங்களில் சன நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

சம்பவ தினத்தன்று காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள் நானே வீட்டின் கேட் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன் அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாகக் கூறியே சென்றாள் ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கிப் புறப்பட்டாள்.

பாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தைக் கடந்தும் வீடு திரும்பாததால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன் அவன் அங்கு சென்று பார்த்துவிட்டு பாடசாலை பூட்டியுள்ளதாக தொலைபேசி மூலம் கூறினான் அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை எனக் கூறினார்கள்.

அதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவைத் தேடி அலைந்தோம் அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் எனச் சொன்னார்கள் அதனால் மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்யச் சென்றோம் அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது நீங்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யுங்கள் எனத் தெரிவித்தனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்ய முற்பட்ட போது ‘இந்த வயதுப் பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வருங்கள்’ என பொலிஸார் சொன்னார்கள் அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படிப்பட்டவள் இல்லை எனக் கூறிய பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய ஆட்டோவில் சென்றிருந்தோம் அதே ஆட்டோவில் இரவு 10 மணியளவில் வீடு திரும்பும் போது ‘நான் தினமும் 7.30 மணியளவில் வித்தியாவை ஆலடிச் சந்தியில் காண்கிறனான் இன்றைக்கு காணவில்லை எனவே அவர் வீட்டுக்கும் ஆலடிச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் காணாமல் போயிருக்க வேண்டும் எனவே அந்த பகுதிகளில் தேடிப் பாருங்கள்’ என ஆட்டோ சாரதி சொன்னார்,

அன்றைய தினம் மழை பெய்துகொண்டு இருந்ததாலும் மிகவும் இருட்டி விட்டதாலும் நாம் இரவு வேளையில் தேடாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டோம் மீண்டும் மறுநாள் காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்களுடனும் வித்தியவைத் தேடிச்சென்றோம் அதன்போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடினோம் எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்திருந்தது திடீரென எனது மகனும் அயலவர்களும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினோம்.

அப்போது என் மகன் ஓடிவந்து ‘அம்மா வித்தியா’ என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான் அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன் எம்முடன் வந்தவர்கள் தான் ஓடிச்சென்று வேறு ஆட்களை அழைத்து வந்தனர் நான் சுயநினைவுக்கு வந்ததும் வித்தியாவின் சடலம் இருந்த இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்தில் இருந்தே சடலத்தைப் பார்த்தேன் அருகில் செல்லவில்லை மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால் அவனை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.

பின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டுசென்றனர் என தாய் கண்ணீர்மல்க தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

Related Posts