புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபரான பெண் நேற்றய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்ததோடு, கடந்த வழக்கு தவணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல பிணை விண்ணப்பத்தினை அடுத்த வழக்கு தவணையின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதவான் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் வைத்து வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றச்சாட்டில், இந்தக் கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தாய் மற்றும் அவரது உறவுக்கார பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுள், சுவிஸ்குமாரின் தாய் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிறைச்சாலையிலேயே மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.