வித்தியாவின் கொலையுடன் கடற்படையினருக்கு தொடர்புண்டு: சிறிதரன்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடற்படையுடனும் இராணுவத்துடனும் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வித்தியாவின் கொலையில் கடற்படையினருக்கு பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே குறித்த வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், சிறிதரன் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வடக்கில் மூன்று மேல் நீதிமன்றங்கள் காணப்படுவதோடு, சிறப்பு அமர்வாக குறித்த வழக்கை கொண்டுநடத்தும் வசதிகள் உள்ள நிலையில், அதனை கொழும்பிற்கு மாற்ற வேண்டியதன் தேவை என்ன என்றும் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், மாணவியின் குடும்பத்தார் தமிழர்களாக இருக்கும் போது, கொழும்பில் மூன்று சிங்கள நீதியரசர்களது முன்னிலையில் குறித்த வழக்கை விசாரிப்பதற்கு முயற்சிப்பது மிகவும் அநீதியானதென சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மாணவியின் பெற்றோருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வீடும் அவர்கள் வாழ்வதற்கு உகந்த பிரதேசத்தில் அமையப்பெறாத காரணத்தால், அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள் என்பதையும் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

மாணவி வித்தியாவின் கொலைக்கு நீதி வேண்டி இரண்டு வருடங்களுக்கு மேலாக அவரது உறவினர்கள் காத்திருக்கும் நிலையில், குறித்த வழக்கை கொழும்பிற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் அண்மைய காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கெதிராக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த வழக்கை வடக்கு மாகாணத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினரால் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts