வித்தியாவின் கொலையில் குற்றவாளிகள் வெளியே! : மாவை

வித்தியாவின் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் மாணவி வித்தியாவின் மரணத்திற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பானது, விடுதலைக்காக போராடிய மக்கள் மத்தியில் மது, போதை போன்ற சீரழிவுகள் இடம் பெறக் கூடாது என்பதனைக் காட்டுகின்றது.

அதேபோன்று, தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகள் தெரிவித்த கருத்தினை நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தால் இதனுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்.

எவ்வாறாயினும் இந்தத் தீர்ப்பானது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி பெண்களுக்கு எதிராக வன்முறைகளைச் செய்பவர்களுக்கு எதிரான தீர்ப்பாகவே இது நோக்கப்படுகின்றது.

விடுதலைக்காக உயிர்களைத் தியாகம் செய்த உன்னத மக்கள் நிறைந்த எமது சமுதாயம், பண்பாடுகளுக்குப் பெயர் பெற்றது. இது போன்ற தொரு சமுதாயத்தில் சீரழிவுகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

போர்க்காலத்திலும் கூட வீழ்ச்சியடையாத எமது சமுதாயத்தின் கல்வி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் இருந்து மீண்டு எமது சமூகமானது கல்வியிலும், பண்பாட்டிலும் உன்னத வளர்ச்சியினை அடைய வேண்டும் எனவும் சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts