வித்தியாவின் உயிரிழப்பு மூன்று வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி நீதாய தீர்ப்பாயத்தில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய தீர்ப்பாயத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நேற்றய தினம் (05.07.2017) ஆம் திகதி வரை நடைபெற்று வந்தது.
இதற்கமைய நேற்று (புதன்கிழமை) மன்றில் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.மயூதரன் மற்றும் தடவியல் பொலிஸார் சாட்சியமளித்திருந்தனர்.
சாட்சியத்தின் போது, வித்தியாவின் உடலில் 8 காயங்கள் இருந்ததாகவும், மூன்று சந்தர்ப்பங்களில் இறப்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஒன்று துணியினால் வாயை அடைத்த போது சுவாசப்பாதை அடைப்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும், தலைப் பகுதியில் ஏற்பட்ட அடிகாயத்தினால் இரத்த கசிசு ஏற்பட்டு அதிகமான குருதி வெளியேற்றத்தினால் வித்யா உயிரிழந்திருக்கலாம் மற்றும் கழுத்தில் கட்டப்பட்ட பட்டி இறுக்கப்பட்டதன் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்தார்.
குறித்த 8 காயங்களும் வித்தியாவின் பின் பக்கம், தலை, இடுப்பு, காலில் முள்ளு குத்திய அடையாளங்களும், கன்னம், உதட்டிலும் காயங்கள் இருந்தன. வித்தியாவின் உடலை பரிசோதனை செய்த போது கூட்டு வன்புனர்விற்கான காயங்கள் இருந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.
இதுவரையில் இந்த வழக்கில் 10 சாட்சியங்கள் சாட்சியமளித்துள்ள நிலையில் இன்னும் 40 சாட்சியங்கள் சாட்சியமளிக்கவுள்ளன.
இந்த நிலையில் வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 26 ஆம் திகதி புதன்கிழமை வரை நடாத்துவதற்கு மன்றில் திகதிகள் குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.