விதிகளை மீறி தலைவராக முற்படும் ஆர்னோல்ட்!! யாழ் உதைபந்தாட்ட லீக் தடைசெய்யப்படலாம்?

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் தடைசெய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அப்படியான நிலைமை உருவாகினால், அடுத்த சில வருடங்களிற்கு யாழ் உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட 33 கழகங்களும், எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் இருண்ட உதைபந்தாட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிடும்.

கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே, இந்த விபரீதமான நிலைமை உருவாகியுள்ளது.

கடந்த 12ஆம் திகதி யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தேர்தல் கூச்சல், குழப்பத்தில் ஆரம்பித்து, அடிதடியில் முடிந்துள்ளது.

யாழ் மாவட்ட உதைபந்தாட் லீக்கின் தலைவராக இருந்தவர் இம்மானுவேல் ஆனோல்ட். அவர் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராகவும் இருந்தவர். தற்போதைய யாழ் மாநகரசபையில் 7 முறை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து தோல்வியடைந்தவர். ஆனாலும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என ஒற்றைக்காலில் நின்றார். இதனால் ஏற்பட்ட குழப்பங்களை பலரும் அறிவார்கள்.

இதேபோல, அவர் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கிலும் ஏற்பட்டுள்ளது. அவர் யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கில், சட்டவிதிகளிற்கு முரணாக நீண்டகாலமாக பதவியில் இருக்கிறார்.

இம்முறை யாழ்ப்பாண லீக்கின் தேர்தலில் தலைமை பதவிக்கு இ.ஆர்னோல்ட் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். கடந்த முறை பதவியில் இருந்த மற்றும் சிலரும் போட்டியிட தயாராகினர்.

எனினும், இலங்கை விளையாட்டு சட்டவிதிகளின் படி, ஒருவர் தேசிய சங்கமொன்றில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளில் தொடர்ந்து 2 பதவிக்காலங்களே பதவிவகிக்க முடியும். அதன்படி ஒருவர் 4 வருடங்களே பதவியில் இருக்க முடியும். ஆனால் ஆர்னோல்ட் 8 வருடங்களாக பதவியில் இருக்கிறார். அஜித்குமார் 10 வருடங்களாக செயலாளர் பதவியில் இருக்கிறார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட கழங்களிலிருந்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து, இதனை சுட்டிக்காட்டிய விளையாட்டு அமைச்சு, ஆர்னோல்ட் உள்ளிட்ட தரப்பினர், இம்முறை தலைமை பதவிக்கு போட்டியிட முடியாதென கடிதம் மூலம் அறிவித்தது.

இந்த முறைப்பாடு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கும் அனுப்பப்பட்டது. ஆர்னோல்ட் உள்ளிட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிறிரங்காவின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டது.

உதைபந்தாட்ட சங்கங்களின் தேர்தலை தேசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மேற்பார்வையிலேயே நடத்தப்பட வேண்டுமென்ற விதிமுறையின் அடிப்படையில், யாழ்ப்பாண சங்கத்தினர் தேசிய சம்மேளனத்திற்கு கடிதம் அனுப்பினர். 12ஆம் திகதி நடைபெற்ற தேர்தலை கண்காணிக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி, தேசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பதில் பொதுச்செயலாளரின் தலைமையில் 4 பேர் கொண்ட குழு யாழ்ப்பாண சங்கத்தின் தேர்தலை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

யாழ் உதைபந்தாட்ட சங்கத்தின் தேர்தல் ஆரம்பித்த போது, தேசிய சம்மேளனத்தின் பிரதிநிதிகள், அறிவித்தலொன்றை வாசித்தனர். விதிகளை மீறி- தற்போது பதவியில் உள்ளவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற விதிகளை சுட்டிக்காட்டினர்.

இதன்போது தர்க்கம் ஏற்பட்டது. தற்போது பதவியில் உள்ள ஆர்னோல்ட் தரப்பினர், மீண்டும் போட்டியிடப் போவதாக தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் தேசிய உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் பலவந்தமாக மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தேசிய உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் ஆர்னோல்ட்டினாலும், மற்றும் சிலராலும் மண்டபத்திலிருந்து பலவந்தமாக தள்ளி வெளியேற்றப்பட்டதாகவும், அதனை தனது கண்களால் பார்த்ததாகவும், தலைவர் தெரிவில் போட்டியிட்ட இளம்பிறையன் தெரிவித்தார்.

தாம் தாக்கப்பட்டதாக அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், ஆர்னோல்ட் தரப்பு புதிதாக நிர்வாகம் தெரிவு செய்ததாக குறிப்பிடப்படுகிறது.

எனினும், ஆனோல்ட் தரப்பு அதை மறுத்துள்ளது. அதிகாரமில்லாத உதைபந்தாட்ட குழுவின் உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்டு, கூட்ட கோவையை எடுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டினார்.

மண்டபத்தில் நடந்த முரண்பாடு பற்றி இரண்டு தரப்பும் ஏட்டிக்குப்போட்டியாக குற்றம்சாட்டுகிறது என வைத்துக் கொண்டால் கூட, ஆர்னோல்ட் தரப்பு புதிய நிர்வாகம் தெரிவு செய்ததும், செய்த முறையும் விதி மீறலானதே.

அதாவது, இலங்கை தேசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தை சவாலுக்குட்படுத்தி செயற்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே தேசிய உதைபந்தாட்ட சம்மேளன தலைமைக்கான தேர்தலில், தற்போதைய தலைவர் சிறிரங்காவும், ஆர்னோல்ட்டும் போட்டியிட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவோ என்னவோ, யாழ் லீக்கின் தேர்தல் வரை மோதல் நீண்டுள்ளது.

தற்போதைய நிலைமையில், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் யாழ்ப்பாண லீக் தடைசெய்யப்பட எல்லா வாய்ப்பும் உள்ளதாக உதைபந்தாட்ட நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் கூறுகிறார்கள். அது எத்தனை வருட தடையாக இருக்கும் என்பதே தற்போதுள்ள கேள்வியென்கிறார்கள் அவர்கள்.

யாழ்ப்பாண லீக்கிற்கு தடை விதிக்கப்படுவது மட்டுமல்ல, புதிய நிர்வாக தெரிவில் அடாத்தாக நடந்து கொண்ட விவகாரத்தில் ஆர்னோல்ட் உள்ளிட்டவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகலாமென்கிறார்கள். அவர்ளும் தடையை எதிர்கொள்ளக்கூடும்.

யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கை தடைசெய்யும் முடிவை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் எடுக்குமா என்பதே இப்பொழுதுள்ள பெரிய கேள்வி.

அப்படியொரு நிலைமையேற்பட்டால், யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட 33 கழகங்களினதும், எண்ணற்ற வீரர்களினதும் உதைபந்தாட்ட கனவு கருகிப் போய்விடும்.

Related Posts