விண்ணப்பதாரிகள் தவிர்ந்த ஏனையோர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்

அண்மையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்திய சர்வதேச தர அங்கீகாரம் மிக்க கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் அதிக காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பதாரிகள் அல்லாத ஏனையோருக்கு திணைக்களத்தின் உள்வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் லக்ஷான் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டை சர்வதேச தர அங்கீகாரம் பெற்றதாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன் பிரகாரம் கடந்த 8 ஆம் திகதி குறித்த கடவுச்சீட்டு மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய கடவுச்சீட்டாக முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய கடவுச்சீட்டு சர்வதேச தரம்மிக்கதாக இபாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உயிரியல் காலக்குறிப்புத் தகவல்களாக கைவிரல் அடையாளம் பயன்படுத்தவுள்ள அதேவேளை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரங்களுக்கேற்ப விண்ணப்பதாரியின் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015 இலக்கம் 7 ஆம் திருத்தச்சட்டத்தின் 1948 இலக்க 20 சட்டத்தின் பிரகாரம் 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் தமது கைவிரல் அடையாளங்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.அவ்வாறு பெற்றுக்கொடுக்கும் கைவிரல் அடையாளங்களை கண்டிஇவவுனியா மற்றும் மாத்தறை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதான கிளைக்காரியாலயங்களில் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும்.

16 வயதுக்கு குறைந்தவர்கள் தமது கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களுக்கும் தனியான ஒரு கடவுச்சீட்டு வழங்கப்படும் என்பதால் அவர்கள் தமக்கு 16 வயது பூர்த்தியாகும் பட்சத்தில் தமது கடவுச்சீட்டை புதுப்பித்து கைவிரல் அடையாளம் பதிக்கப்பட்ட கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. வெளி நாடு செல்லும் போதும் நாட்டிற்குள் பிரவேசிக்கும் போதும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற பல நிபந்தனைகளும் விடுக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டிலிருந்து ஒருவர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர் முன்னர் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டு அமுலில் இருக்கும் அதேவேளை நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கூண்டினுள் சென்று தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்த பின்னரே வெளியே வர முடியும்.

இந்த மாற்றம் செய்யப்பட்டதும் புதிய சட்டதிட்டங்களுக்கு அமைவானதுமான கடவுச்சீட்டு பெற்றவர் ஒரு கடவுச்சீட்டுக்கு அதிகமாக கடவுச்சீட்டு பயன்படுத்தும் வாய்ப்பும் அற்றுப்போகும்.தேவையற்ற விதத்தில் வெளிநாடுகளில் நடந்துக்கொள்ள மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் இலங்கையர் ஈடுபடுகின்றமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தனியார் புகைப்பட நிலையங்களில் பெற்றுக்கொள்ளும் புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது மாறாக திணைக்களத்தின் அனுமதி பெற்ற புகைப்பட நிலையங்களில் பெற்றுக்கொள்ளும் புகைப்படங்கள் இணையதளம் ஊடாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்காக புகைப்பட நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் பற்றுச்சீட்டு கடவுச்சீட்டு பெற திணைக்களம் செல்லும் போது புகைப்பட நிலையத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகைதரும் விண்ணப்பதாரர்கள் புதிய கடவுச்சீட்டு வழங்கலில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்றார்.

Related Posts