விடுவிக்கப்பட்ட காணிகளை கையகப்படுத்தியது பொலிஸ்!

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்” என்று மக்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. காங்கேசன்துறை பிரதான வீதியில் தல்செவன விடுதி வரை மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேறினர். பொலிஸார் 59 ஏக்கரை விடுவிக்கவில்லை. பொலிஸாருக்கு மாற்றுக் காணி மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்டது. எனினும் பொலிஸார் அங்கிருந்து அகலவில்லை.

பொலிஸாரின் பாவனையிலுள்ள 59 ஏக்கரைவிட, மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்ட காணிகளையும் தற்போது பொலிஸார் வேலிகளை அமைத்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று மக்கள் கூறுகின்றனர். இதனால் காணிகளைத் துப்புரவு செய்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

விடுவிக்கப்பட்ட இந்தப் பகுதியில் இரண்டு வீதிகளைத் திருத்தம் செய்வதற்கு மாவட்ட செயலகம் விலைமனுக் கோரியிருந்தது. இந்த வீதிகளும் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Related Posts