முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மக்களுடைய காணிகள் உள்வாங்கப்படவில்லை என நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று 32 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் மீள்குடியேற்ற அமைச்சினால் காணி விடுவிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
மீள்குடியேற்ற அமைச்சினால் நேற்றய தினம் வெளியிடப்பட்டுள்ள காணி விடுவிப்பு தொடர்பான அறிக்கையில் கேப்பாப்புலவில் 248 ஏக்கர் அரச காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை 31ஏக்கர் தனியார் காணிகள் சீனியாமோட்டையிலிருந்து விடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களது காணிகள் விடுவிப்பது தொடர்பில் எந்தவித விபரங்களும் இந்த அறிக்கையில் குப்பிடப்பட்டிருக்கவில்லை.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவு கிராம மக்கள் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காகவென அழைத்துவரப்பட்டு நந்திக்கடலை அண்மித்த காட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த காட்டுப் பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக வாழ்ந்து வரும் இந்த மக்கள் தொடர்ந்தும் அகதி வாழ்க்கை வாழ்வதற்கு தயாரில்லை என தெரிவித்து வருவதுடன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.