யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், தமிழ் கலாச்சாரத்திற்கு பெயர்போன இடம். இந்த கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு உறுதியாக இருக்கும். யாழ்.கலாச்சாரத்தை சீரழிக்க இடமளிக்கப்படமாட்டாது.
யாழில் ஒரு சில விடுதிகளில் குறிப்பாக தனியார் விடுதிகளில் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக அறிகின்றோம். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உண்மையான தகவல்கள் வேண்டும்.
உண்மையாக இந்த விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இருக்குமாயின், எமது பொலிஸார் நீதிமன்ற கட்டளையைப் பெற்று அந்த விடுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொள்ள முடியும்.
அண்மையில் விடுதி ஒன்று யாழ்.மாநகர சபையினால் முற்றுகையிடப்பட்டது. இதனை வரவேற்கின்றோம். பொலிஸார் தான் கலாச்சார சீரழிவுகளைத் தடுக்க வேண்டும் என்று இல்லை. தன்மானமுள்ள அனைவரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் சட்ட நடவடிக்கைக்கு பொலிஸார் உறுதுணையாக இருப்பர் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் ஆளணி போதுமானதாக இல்லை!-
யாழ். குடாநாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் குற்றச் செயல்கள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் காசோலை மோசடிகள், வீடு உடைத்துக் கொள்ளையிடல், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், அடித்துக் காயப்படுத்துவது, கொலை செய்வது, வெட்டிக் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் கடந்த வாரம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது இதற்கு அமைவாக யாழ். பொலிஸ் பிரிவில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றப் பிடியாணை-6 பேர், களவு-7 பேர், சட்டவிரோத மதுபான விற்பனை-5 பேர், வீதி விபத்து-3 பேர், அடித்துக் காயப்படுத்தியமை தொடர்பில்-19 பேர், குடிபோதையில் இடையூறு 3பேர், அத்துமீறி வீட்டினுள் நுழைந்தது- 1, குடிபோதையில் வானகம் செலுத்தியமை- 5 பேர், சூழலுக்கு பங்கம் விளைவித்தமை-1, பொது இடங்களில் மது அருந்தியமை 2 பேர், சந்தேகத்தின் பேரில் 11, கொலை செய்வதற்கு உதவியமை- 1, என பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.