விடுதலை செய்யப்பட்டவர்கள் 6 பேர் போதைப்பொருள் வியாபாரிகளும், கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சிங்களவர்கள் -சுரேஸ் பிரேமச்சந்திரன் .

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையினைக்கோரி தொடர்ந்து 5 தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த கைதிகளில் 18 கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த சந்திப்பின்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

18 அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 13 அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மகசின் சிறைச்சாலையி ல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகள் உணவு உட்கொள்ளாமையினால் மயக்கமடைந்திருக்கும் நிலையில் 18 அரசியல் கைதிகளும் சிறைச்சாலை அதிகரிகளினால் வலுக்கட்டாயமாக அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- இளங்கோ, கானகரன், குகநாதன், லோகநாதன், திருகோணமலை- கோவர்த்தனன், முல்லைத்தீவு-காந்தறேகன், பவானந்தன், கிருபானந்தன், ஜெயலத் சில்வா, பார்த்தீபன், மனோகரன், ராஜா, செந்தூரன், செமஸ்ரியன் ஆகியோரும், அனுராதபுரம் சிறையிலிருந்த முல்லைத்தீவு- நிசாந்தன், யாழ்ப்பாணம்- கோபிநாத்,

வல்வெட்டித்துறை- விசால் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கண்டி போஹம்பறை சிறைச்சாலையிலும் மாத்தளை- சிவகுமார், யோகராசா, மனோகரன், செல்வகுமார், ரமேஸ்குமார், கிளிநொச்சி- தேவராசா, ஜெயோசன், திகன- ரூபச்சந்திரன், லந்துள- புஸ்பராஜா,

கண்டி- விக்கிரமசிங்க, சுந்திமணி, யாழ்ப்பாணம்- இளங்கோ ஆகியோர் தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாக கூறிக்கொண்டு அமைச்சர்களுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தேவையான போதைவஸ்து வியாபாரிகளையும், விடுதலை செய்து சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதையே நாங்கள் கண்கூடாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

அரசியல் கைதிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கொள்கை அடிப்படையிலான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கவில்லை.

மாறாக அவர்கள் தாங்கள் நினைத்ததையே செய்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றைய தினம் 28 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளதாக கூறிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் விடுதலை செய்யப்பட்டவர்கள் 6 பேர் போதைப்பொருள் வியாபாரிகளும், கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுமேயாவர்.

இவர்கள் 6 பேரும் சிங்களவர்களாவர். மேலும் விடுதலை செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் கைதிகள், கடந்த ஒன்றரை வருடகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

மேலும் முழுமையாக அரசியல் கைதிகள் இதில் விடுதலை செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் விடுவிக்கப்பட்டவர்களும் பிணையிலேயே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் விடுவிக்கப்பட்டவர்களும் இரு வாரத்திற்கு ஒரு தடவை, கொழும்புக்கு சென்று கையெழுத்திடவேண்டும்.

ஆனால் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியது இதற்காகவல்ல. உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட 116 பேர் 8 தொடக்கம் 18 வருடங்கள் சிறைகளில் உள்ளார்கள்.

தண்டனை பெற்ற கைதிகள் 48 பேர் உள்ளனர். மேலும் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டவர்கள், 66பேர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் எதிர்பார்த்தது. தங்களுக்கு பொதுமன்னிப்பே தவிர பிணை அல்ல. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் பொதுவான கொள்கை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். என்றார்.

Related Posts