விடுதலைப் புலிகள் சுற்றுச்சூழல் தினத்துக்காக தங்கள் மாணவர் தினத்தை மாற்றியமைத்தார்கள் – பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் சுற்றுச்சூழல் மீது கொண்டிருந்த அக்கறை அளப்பரியது. ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தவாறு சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது சாதாரணமானதல்ல. உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்களின் முக்கியத்துவம் குறைந்து போய்விடக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றியமைத்தார்கள் என்று வடமாகாண விவசாயம், கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

2

உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (05.06.2014) மண்டைதீவு கண்டல்நிலச் சூழலில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

விடுதலைப்புலிகள் பற்றி இப்போது பலரும் பலவாறாகப் பேசி வருகிறார்கள். வரலாற்றின் பக்கங்களில் சில விடயங்கள் பதியப்படாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இதனைக் குறிப்பிட விரும்புகிறேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் விடுதலைப்புலிகள் உலக சூழல்தினத்தை 1992ஆம் ஆண்டு யூன் 5ஆம் திகதி கொண்டாடியபோது, அதில் உரையாற்றுவதற்காக என்னையும் அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே கலந்து கொண்டிருந்தார்கள். இது எனக்கு மிகுந்த அதிருப்தியைக் கொடுத்தது.

யூன் 5ஆம் திகதிதான் தியாகி சிவகுமாரனின் நினைவு தினம். அவரது நினைவு தினத்தையே விடுதலைப்புலிகள் தங்கள் மாணவர் தினமாகவும் கொண்டாடி வந்தார்கள். பெருமெடுப்பில் கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கலந்து கொள்வார்கள். உலக சுற்றுச்சூழல் தினத்தையும் மாணவர் தினத்தையும் ஒரேநாளில் வெவ்வேறு விழாக்களாகக் கொண்டாடியதாலேயே சூழல் தினத்துக்கான முக்கியத்துவம் இல்லாமல் போனது. இரண்டு தினங்களையும் இணைத்து ஒரே நிகழ்ச்சியாக கொண்டாடியிருந்தால் கூடுதலானவர்கள் பங்கேற்றிருப்பார்கள் மாணவர்களும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றிருக்க முடியும் என்று என் அதிருப்தியை மேடையில் இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்தேன்.

அப்போது சந்திக்குச் சந்தி விடுதலைப்புலிகளினது அபிப்பிராயப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். சுற்றுச்சூழல் தினத்துக்கான முக்கியத்துவத்தையும், விடுதலைப்புலிகளின் மாணவர் தினத்தை அதே தினத்தில் கொண்டாடுவதால் சுற்றுச்சூழல் தினம் மீதான கவனிப்புக் குறைவது பற்றியும் அன்றைய தினமே விடுதலைப்புலிகளின் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி அந்தப் பெட்டியில் சேர்த்திருந்தேன். அது மாத்திரமல்லாமல், அக்காலப்பகுதியில் பிரபலமாகியிருந்த கிட்டு பப்பாசி பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். கிட்டு வெளிநாடொன்றில் இருந்து எடுத்து வந்த பப்பாசி இனம் அது. அவர் எடுத்து வந்ததால் மாத்திரம் அது கிட்டு பப்பாசி ஆகிவிடமுடியாது. இவ்வாறு பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பெயர் சூட்டி அழைப்பது இந்தப் பப்பாசி இனத்தை உருவாக்கியவரின் அறிவுச் சொத்துரிமையைப் பறிப்பது போன்றதாகும் என்றும் எழுதியிருந்தேன்.

இக் கடிதத்துக்கு எனக்குத் தனிப்பட்ட முறையில் பதில் எதுவும் வரவில்லை. ஆனால், அடுத்த சில தினங்களுக்குள்ளாக அவர்களது பண்ணைகளில் மாட்டப்பட்டிருந்த கிட்டு பப்பாசி என்ற பெயர்ப் பலகைகள் யாவும் கழற்றப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டில் இருந்து யூன் 5ஆம் திகதியை உலக சூழல் தினமாக மாத்திரமே கடைப்பிடித்துக்கொண்டு, யூன் 5ஆம் திகதிதான் சிவகுமாரனின் நினைவு தினமாக இருந்தபோதும் யூன் 6ஆம் திகதியே தங்கள் மாணவர் தினத்தைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். 2009 ஆம் ஆண்டு வரை இவ்வாறுதான் நடைபெற்று வந்துள்ளது. இயற்கையின் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தாலொழிய ஒரு ஆயுதப் போராட்டத் தலைமையால் சாதாரணமான ஒருவனின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தைச் செய்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Related Posts