விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை!! -கல்வி அமைச்சர்

பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை.

யாழில் கூட இறுதிகட்ட யுத்தத்தின் போதும் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றன. எனவே நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு இடையூறின்றி பரீட்சைகளை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்தோடு பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு அத்தியாவசிய சேவை கடிதத்தை வழங்குமாறு பிரதேச செயலகங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த கடிதம் , தொழில் அடையாளஅட்டை , பரீட்சை கடமை கடிதம் மற்றும் மாணவர்களாயின் அவர்களது பரீட்சை அனுமதி அட்டை என்பவற்றைக் கொண்டு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

4 இலட்சத்து 7129 பரீட்சாத்திகள் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு , ஒரு இலட்சத்து 10 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதற்காக 3844 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு , 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பரீட்சை கடமைகளுக்காக 25 000 கல்வி சார் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தடையின்றி பெற்றுக் கொடுப்பதற்காக 9 மாகாண ஆளுனர்களுக்கும் விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களது தொழில் அடையாளஅட்டை , பரீட்சை கடமை கடிதம் மற்றும் மாணவர்களாயின் அவர்களது பரீட்சை அனுமதி அட்டை என்பவற்றைக் கொண்டு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறானவர்களுக்கு எரிபொருள் வழங்கும் போது முன்னுரிமையளிக்குமாறு எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இவர்களுக்கு அத்தியாவசிய சேவை கடிதத்தினை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுடன் வரும் பெற்றோருக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள மனிதாபிமானத்துடன் இடமளிக்குமாறு பொது மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

நான் 2005 – 2010 காலப்பகுதியில் கல்வி அமைச்சராக இருந்த போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படவில்லை. பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் கூட யாழ்ப்பாணத்தில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி பரீட்சைகள் நடத்தப்பட்டன.

ஏதேனுமொரு எரிபொருள் நிலையத்திற்கருகிலுள்ள வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் அந்த வழியூடாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் அல்லது கடமைக்கு செல்லும் அதிகாரிகளுக்கு அது இடையூறாக அமையக் கூடும். எனவே இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்து மனிதாபிமானத்துடன் செயற்படுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Related Posts