விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த ஒழுக்கம் மரணித்துவிட்டது

வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் மதுபானப் பாவனை அதிகரித்துள்ளது. கலாசார சீர்கேடுகளும், இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோநிலையும் அதிகரித்துள்ளமை கவலையளிக்கிறது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு எங்கும் இருந்த ஒழுக்கம் இன்று இல்லாமல் இருப்பதை நாம் அவதானிக்கமுடிகிறது. அவ்வொழுக்கமும் முள்ளிவாய்க்காலுடன் மரணித்துவிட்டது என்றும் கூறினார்.

இனமொன்றின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டுமானால், அந்த இனத்தின் கலை, கலாசார, பண்பாடுகளைப் பாதுகாக்க ஆலயங்களும் அதனூடான சமூகங்களும் முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடுக்காமுனை காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ விழாவில் இடம்பெற்ற கலை நிகழ்வு, தலைவர் லவன் தலைமையில், சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்றது. அங்கு சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மாணவர்களுக்கு, கல்வியுடன் ஒழுக்கம் கட்டாயம் ஊட்டப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு எங்கும் இருந்த ஒழுக்கம் இன்று இல்லாமல் இருப்பதை, எம்மால் அவதானிக்கமுடிகிறது. முள்ளிவாய்க்காலுடன் ஒழுக்கமும் மரணித்துவிட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில், மதுபானப் பாவனை அதிகரித்துள்ளது. கலாசார சீர்கேடுகளும் இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோநிலையும் அதிகரித்துள்ளமை கவலையளிக்கிறது.

ஊடகங்களில் தினமும் வரும் செய்தியில், கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் வன்முறை, வாள்வெட்டு என சமூகசீர்கேடுகள் நிறைந்துள்ளதை, சர்வசாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது. இதை அனுமதிக்கமுடியாது.

இவ்வாறான தீய விளைவுகளில் இருந்து எமது மக்களை மீட்கக் கூடியவிதமாக, ஆலயங்கள் மூலமாகவும் கலாசார நிகழ்வுகள் மூலமாகவும் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிற்பட்ட காலத்தில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் இடம்பெறவில்லை. ஆனால், எமது நிலமும் வளமும், மாற்று இனத்தவர்களால் சத்தமில்லாமல் சூறையாடப்படுகின்றன.

எல்லைக்கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்றம் இடம்பெறுகிறது. பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எல்லைக்கிராமான கெவிளியாமடுவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மேற்கொண்டபோது, 2014ஆம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினராக நானிருந்த போது, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து, அதனைத் தடுத்தோம்.

அதுபோலவே, எமது தாந்தாமலை முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை அமைக்க இராணுவம் முயன்றபோது, நேரடியாக அங்கு சென்று அதனைத் தடுத்தோம். மட்டுநகர் மாநகர எல்லையில் பிள்ளையாரடி பிரதான வீதியில் பௌத்த துறவியொருவர் புத்தபெருமானின் சிலையை நிறுவமுயன்ற வேளை, அங்கு சென்று அதனைத் தடுத்தோம்.

இவ்வாறு, மஹிந்த அரசாங்கத்தின் இக்கட்டான காலங்களில் கெடுபிடி உயிர் அச்சுறுத்தல்களை முகம்கொடுத்து அரசியல் செய்தபோதும், எமக்காக ஒதுக்கப்பட்ட பன்முக நிதிமூலமாக நான், கடந்த பதினொரு வருடங்கள் ஒதுக்கப்பட்ட நிதியில், அதிகளவில் கல்வி செயற்பாடுகளுக்கு வழங்கினேன்

அந்தவகையில், கடுக்காமுனை வாணி வித்தியாலய வளர்ச்சிக்காக 2004ஆம் தொடக்கம் 2015 இவரையும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும், என்னால் நிதி ஒதுக்கப்பட்டது. அதை அதிபர்கள் உறுதிப்படுத்துவார்கள். எமது அரசியல் அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இல்லை அதனைவிட எமது உரிமையைப்பெற வேண்டும் என்ற அந்த அபிலாஷைகளை அடைவதற்கான அரசியல் பணியையே, நாம் முன்னெடுக்கின்றோம்.

தற்போது நில அபகரிப்பு, மாற்று இனத்தால் மேற்கொள்ளப்படுவதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அதை தடுப்பதற்கான முயற்சிகளை முடிந்தவரை மேற்கொள்கின்றோம்.

ஆனால், நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை. குறிப்பாக எமது மக்கள் அங்கு சென்று குடியேறக்கூடிய மனப்பாங்கும் எமக்குத் தேவை. எம்மில் பலர், அவ்வாறு குடியேற முன்வருவதுல்லை. இந்த மனப்பாங்கு, எமக்கு வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Related Posts