விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,
பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.
தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.
பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.
அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காணமுடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.
அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.
அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார்.
ராஜீவ்காந்தியைக் கொலை செய்தது அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்வதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.
ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.
அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.
பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.
இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர்.
வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.
இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.