விடுதலைப் புலிகளின் காலத்திலேயே எமது பலம் உச்ச நிலையில் இருந்தது: மாவை

முட்கம்பிகளுக்குள்ளே இருந்த எமது இனத்தின் பலம் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே உச்ச நிலையில் இருந்தது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நற்பட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “எமது இனத்தின் பலம் என்பது, விடுதலைப் போராட்ட வரலாறு ,அரசியல் வரலாறு விடுதலைப் புலிகளின் காலத்திலேதான் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்பட்டது . விடுதலைப்புலிகள் ஜனநாயக ரீதியாக அடக்குமுறைக்கு ஆளாகி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் எமது மக்கள் அடக்கட்டப்பட்டு இருந்த போதும், மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து அதிகப்படியான உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்கள்.

அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஆயுதம் ஏந்தாமல் விடுதலைப்புலிகளுடன் எங்களது அனுசரணையை கொடுத்திருந்த காலந்தான் போராட்ட வரலாற்றில் ஒரு உச்சமான பலமான காலமாக இருந்தது. விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் சர்வதேச ராஜதந்திர நடடிவக்கைகளை விடுதலைப் புலிகள் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூறினார்கள்.

எமது மக்களை நாங்கள் போய்ச் சந்திக்க முடியாத நிலையிலே தேர்தல் நடத்தப்பட்டது. இருந்த போதும் எமது மக்கள் எமது பலத்தினை நிரூபிப்பத்தனர். இவர்களது தைரியமான செயற்பாடுகளே நாங்கள் எமது மக்களின் பிரச்சினைகளை உலகளாவிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தோற்கடிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் கட்சிகளில் உள்ளவர்களது இலக்கானது தமிழ் தலைமையை தோற்கடிக்க வேண்டும் என்பதாகும்.

தமிழரசுக் கட்சிக்கு எதிராக சிங்கள தீவிரவாதிளாலாலும் பெரும் வழக்கறிஞர்களாலும் குறித்த கட்சியின் யாப்பில், சமஸ்ரி, சுயநிர்ணய உரிமை, வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த தாயகம், இறையாண்மை என்பன பற்றி இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகவே தமிழரசுக் கட்சியை தடைசெய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருந்தார்கள் அத்தோடு சம்பந்தனுக்கு எதிராக ஐந்து வழக்குகளும, எனக்கு எதிராக ஏழு வழக்குகளும் நீதிமன்றத்தில் போடப்பட்டது அதற்கான தீர்ப்பு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் அராஜகமான ஆட்சியினை மாற்றி அமைத்து எமது நீண்டநாள் பிரச்சினைகளுக்கு நிருந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது மக்களினதும், முஸ்லிம், மலையக மக்களினதும் முழு ஆதரவுடன் ராஜதந்திர ரீதியாக ஆட்சியை மாற்றியமைத்தோம். அதனை சர்வதேசமும் பாராட்டியது.

இங்கு நடைபெற்ற போராட்டத்திலே இலங்கை அரசாங்கமானது தமிழ்மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தார்கள். அந்த விடயமானது உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் ஐக்கிய நாட்டின் மனித உரிமை பேரவையில் அது ஒரு போர்க் குற்றம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.

அந்த பிரேரணையை 2012ஆம் ஆண்டு ஐக்கியநாட்டு சபைக்கு கொண்டுவந்த போது, 47 நாடுகள் அங்கம் வகிக்கும் அந்த சபையிலே 24 வாக்குகள் அமெரிக்காவின் நடவடிக்கை மூலம் கிடைத்தது. அதன் காரணமாக 2012ஆம் ஆண்டு அந்தப் பிரேரணை ஐக்கியநாட்டு சபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வை காண்பதற்கு உலக நாடுகள் அத்தனையும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சர்வதேச நாடுகளுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது.

தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் தங்களது இருப்பை தக்கவைக்க மிகவும் பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர்க் குற்றங்களையும் ஊழல் குற்றங்களையும் புரிந்தவர். அதனை மறைப்பதற்காகவே, இந்த தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றார். இந்த நிலைமையில் எமது மக்கள் வாக்களித்தல் தொடர்பாக நல்ல தீர்மானத்தினை எடுக்க வேண்டும்.

புதிய அரசியல் அமைப்பூடாக சமஷ்டி அடிப்படையிலான தீர்மானத்தினை அந்த அரசியல் அமைப்பில் கொண்டு வருவதன் மூலம் எமது பிரதேசங்களை நாங்களே ஆழுகின்ற தன்னாட்சியை ஏற்படுத்தக் கூடிய அரசியல் தீர்வை நோக்கிய முன்னெடுப்பை எடுத்துச் செல்கின்றவேளையில் அச்சந்தர்ப்பத்தினை இழக்காத வகையில் தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் நாங்கள் இழந்த இழப்பிற்கு சிறந்த அரசியல் தீர்வினை வழங்காமல் போனால் நாங்கள் சர்வதேசத்துடன் சேர்ந்து அடுத்த கட்டம் பற்றி ஆராய வேண்டி வரும்” எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்குப் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அமைச்சருமான கி.துரைராசசிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts