விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நிலங்களை மாத்திரம் அல்ல அவர்களது நினைவு தினங்களையும் இராணுவம் அபகரிக்கிறது

விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காகப் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம், இப்போது விடுதலைப்புலிகளின் நினைவுதினங்களையும் அபகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

1

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (04.07.2014) பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீளக்குடியேற அனுமதிக்கக்கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும்,

விடுதலைப்புலிகள் தங்களது தற்கொலைப் போராளிகள் நினைவாக யூலை 5ஆம் திகதியைக் கரும்புலிகள்தினமாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். ஒப்பற்ற தியாகங்களைச் செய்த அவர்களின் நினைவுகள் தொடர்ச்சியாக மக்களின் மனங்களில் நிலைபெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் யாழ் மாவட்டத்தில் இராணுவம் இந்தத் திகதியில் எல்லே விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்திருக்கிறது.

கரும்புலிகள்தினத்தில் விளையாட்டுக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தது மாத்திரமல்லாது, இந்நிகழ்ச்சிக்கு பிரதமவிருந்தினராகக் கலந்துகொள்ளும்படி எமது முதலமைச்சரிடம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்கள். நமது முதலமைச்சர் சொன்ன பதிலை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். தனிப்பட்டரீதியில் உங்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நீங்கள் என்னிடம் இராணுவத்தினராக வந்துள்ளீர்கள். இராணுவத்தை எங்கள் இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கோரிக்கொண்டு இருக்கின்ற நான் எப்படி இராணுவத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமுடியும் என்று பதிலளித்திருக்கிறார்.

வடக்கே காங்கேசன்துறையில் இருந்து கிழக்கே சம்பூர்வரை பொதுமக்களின் காணிகளை இராணுவம் அபகரித்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக அவர்களது பண்ணைகளில் எல்லாம் இராணுவமே இன்று நிலைகொண்டிருக்கிறது. இங்குள்ள பழமர வகைகள் எல்லாம் திக்கெட்டும் இருந்து விடுதலைப்புலிகள் கொண்டுவந்து சேர்த்த அரிய நல்லின வகைகள். இந்தத் தாவர வளங்கள் எமக்குச் சொந்தமானவை. ஆனால், இங்கு நிலைகொண்டிருக்கும் படையினர் இந்த அரிய தாவரங்களையெல்லாம் பதிவைத்து தங்கள் தளபதிகளுக்கும் தென்னிலங்கையில் உள்ள உறவினர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கக்கோரியும் எமது பண்ணைகளை எங்களிடம் ஒப்படைக்கக்கோரியும் எத்தனையோமுறை கேட்டுவிட்டோம். எத்தனையோ கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்திவிட்டோம். ஆனால், இலங்கை அரசாங்கத்தின் காதுகளிலோ, இராணுவத்தினரின் காதுகளிலோ எங்களது கோரிக்கைகள் விழுவதாகத் தெரியவில்லை. எமது நிலங்கள் எங்கள் கைகளுக்குக் கிடைக்கும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான், வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், து.ரவிகரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

2

3

4

5

6

7

8

9

Related Posts